யானை காப்பாளன்…
ஆனைமலைத்தொடர் கோழி கமுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36 ) மலசர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறை – யானைகள் முகாமில் “கவாடி’’ எனும் யானை காப்பாளராக பணியாற்றுகிறார். வனத்துறையில் வாட்சர் போன்ற கடைநிலை ஊழியர் பணி.
இவருக்கு தினமும் யானையை இரண்டு வேளை குளிப்பாட்ட செய்வது, யானைகளை காட்டில் பாதுகாப்பாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது. இரண்டு வேளை உணவு கொடுப்பது, சுற்றுலா வருபர்களை யானை மீது அமர்த்தி சவா(பா)ரிக்கு அழைத்துச் செல்வது, மேலும் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை பிடிப்பது போன்ற ஆபத்தான பணிகளே மணிகண்டனுடையது.
ஆனால் இந்த ஆபத்தை போலவே இவருக்கு வழங்கப்பட்ட யானை மாரியப்பன் முதுமலை முகாமில் பிறந்தது பின்னர் சமயபுரம் கோயிலுக்கு கொடுக்கப்பட்டு கும்கியாக பழக்கப்படுத்திய மாரியப்பன் யானை (27 வயது அங்கிருக்கும் போது அதற்கு மதம் பிடித்தால் சுமார் 9 ஆண்டுகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அது பின்னர் டாப்சிலிப் அழைத்து வரப்பட்டது 2011 ஆண்டு வாக்கினில்தான். ). அதன்பின்னர் இது கும்கி யானையாக மாற்றப்படுகிறது. இன்றைக்கும் பார்க்க அமைதியாக இருந்தாலும் கோபம் வந்தால் காட்டு யானையைக் கபளீகரம் செய்துவிடும்” கொம்பன்.
இந்த மாரியப்பன் யானையை ஓரளவு பழக்கி இங்கே ஆனைமலை டாப் சிலிப் யானைகள் முகாமிற்கு அழைத்து கொண்டு வந்தது முதல் அதனை கண்ணும் கருத்துமாக அதை கவனித்து வருபவர் மணிகண்டன்.
மாரியப்பன் யானை இங்கே வந்து 9 ஆண்டுகள் ஆன பின்னரும் அதனை வெகு சுலபமாக கையாள முடியாது. இங்கு வந்த பின்னரும் மாரியப்பன் யானை மிதித்து வடிவேல் என்ற பழங்குடி இளைஞரும் பலியாகி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் மாரியப்பன் யானை மணிகண்டனை தாக்கியதில் பலத்த காயம் அடைகிறார். இவரை வனத்துறையினர் ஒரு வாகனத்தில் ஏற்றி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். தோல்பட்டையிலும், காலிலும் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் தன்னை தாக்கிய யானை யாருக்கும் கட்டுப்படாமலும், உணவு ஏதும் சாப்பிடாமல் யாரையும் நெருங்க விடாமல் சுற்றி திரிகிறது.
இதனை கேள்விப்பட்ட மணிகண்டன் தன்னுடைய சிகிட்சையினை பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் இருந்து நேராக காட்டிற்குள் சென்ற மாரியப்பன் யானையை இலாவகமாக பிடித்து பாதுகாப்பாக முகாமில் கட்டி வைத்துவிட்டு அதற்கு தேவையான உணவும், அதை எப்படி கையாள வேண்டும் என்று சக ஊழியருக்கு வழிகாட்டி விட்டு மீண்டும் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சை பெறுகிறார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், உயர் அதிகாரிகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். இதுபோன்று யானை தாக்குதலில் காயம் அடைந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி பெறும் வாய்ப்பு இருக்கிறது அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தான் அவரை மருத்துவமனைக்கு வண்டி வைத்து அனுப்பி வைத்தோம் என்றார்கள்.
தமிழகத்தில் கடந்த சில காலமாக யானை மனிதன் மோதல் சம்பவங்களில் ஏராளமான உயிரிழப்புகள் இரண்டு தரப்பிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது பெரும் அச்சமூட்டுகிறது.
ஆனால் யானைகளையும் அவற்றைப் பாதுகாப்பதற்காக மணிகண்டன் போன்ற எண்ணற்ற பழங்குடியினர் தியாகமும் அர்ப்பணிப்பும், செயல்பாடுகளும் பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை…