வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் பொழிந்த அதிதீவிர மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா அத்துடன் கடப்பா, நெல்லூர், மதனப்பள்ளி, அனந்தபூர் உட்பட்ட பிற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பும் நிலையை எட்டியது.
அதிதீவிர கனமழையால் உலகின் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் சுவர்ணமுகி ஆறு (திருப்பதி), சாராவதி ஆறு (அனந்தபூர்), பாப்பாகனி ஆறு (மதனப்பள்ளி), செய்யாறு அத்துடன் இந்த ஆறுகளை தனது கிளை நதியாக கொண்டுள்ள நந்தி மலையில் உருவாகி வரும் பென்னாறு (கடப்பா, நெல்லூர்) என அனைத்து ஆறுகளிலும் இதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கட்டுப்படுத்த இயலாத காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இன்று கீழ் பென்னாற்றில் 2,58,000 கனஅடி வெள்ள நீர் வெளிச்சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ள ஓட்டத்தின் இடையே பல கிராமங்கள்,நகரங்கள்,தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் என எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறாது. சிறு அணைகளில் உடைப்பு, ஏரியில் உடைப்பு, காரணமாக பாலங்கள் சாலைகள் ரயில் பாதைகள் வீடுகள் அடித்துச் செல்லுதல் என பல பாதிப்புகள் ஏற்பட்டிள்ளது.
வெள்ளத்தில் கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் அடித்து செல்லும் காட்சிகள் காண்போரை கதிகலங்க வைக்கிறது.
இந்த வெள்ளாம் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் வீடற்று வாழ்விடம் அற்று அகதிகளாக மாறிய நிலை உருவாகி உள்ளது. அரசு, பேரிடர் மேலாண்மை குழு மற்றும் மக்கள் என அனைவரும் இயன்ற முதல்கட்ட உதவியை தொடரும் மழையில் செய்து வருகிறார்கள்.